குரு பெயர்ச்சி பலன்கள் - மகரம்

0

(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) 

நினைத்தது நிறைவேற நிதானம் தேவை



குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இங்கு அவரால் பண விரயம் ஏற்படும். தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகலாம். வீண் அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போக வேண்டாம். குரு பகவான் கெடுபலன் அளிக்கும் போது அது உங்களுக்கு இறுதியில் நன்மையிலேயே முடியும். நினைத்தது நிறைவேறும் வரை நிதானமுடன் இருப்பது நல்லது. அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். இதுவும் சிறப்பான இடம் என சொல்ல முடியாது. அதற்காக கவலை கொள்ளத் தேவை இல்லை காரணம். அப்போது குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளன.

முக்கிய கிரகங்களில் ராகு மட்டும் நன்மை தரும் நிலையில் உள்ளார். குரு, கேது, சனி சாதகமற்ற நிலையில் உள்ளனர். பொதுவாக எந்த பிரச்னையிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுக்கவும். சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். சமூகத்தில் மதிப்பு சுமாராகத் தான் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குருவின் பார்வையால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு புதிதாக வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். 2020 ஆக.31 முதல் கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். நன்மை அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

தொழில், வியாபாரம் எதிரிகள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். எந்த தொழிலிலும் முதலீடு அதிகம் செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி வருமானம் காணலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை உங்களின் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். 

சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். குருவின் பார்வையால் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். வியாபாரத்தில் இருந்த பின்னடைவு மறையும். 2020 ஆக.31 முதல் ராகுவால் இன்னல்கள் ஏற்படலாம். வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் இருப்பது நல்லது. இருப்பினும் கேதுவால் ஆற்றல் மேம்படும். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். பணியிடத்தில் பொறுமை, நிதானம் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். உங்கள் வேலையை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வேலை பளு அதிகம் இருந்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குருவின் பார்வையால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கலைஞர்கள் விடாமுயற்சியால் ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். 2020 ஆக.31 முதல் தேவைகள் பூர்த்தி அடையும்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைக் காண்பர். நெல், உளுந்து, கொள்ளு போன்ற தானிய வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் செய்ய வேண்டாம். கால்நடை மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். 2020 ஆக.31 முதல் விவசாயிகள் முன்னேற்றமான பலன் காண்பர்.

பெண்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையை சுமக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2020 ஆக.31 முதல் பணிபுரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வருமானம் உயரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். உடல்நலனில் அக்கறை தேவை.

பரிகாரம்:


* வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை

* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை

* சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top