குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - துலாம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் :

01.05.2024 முதல் 11.05.2025 வரை

இதுவரை களத்திர ஸ்தானமான ஏழாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார்.

அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தூரதேச பயணம் தொடர்பான முயற்சிகள் சிலருக்கு கைகூடும். 

குரு ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மகிழ்ச்சியான தருணத்தை உண்டாக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பழைய சிந்தனைகளால் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

குரு நின்ற பலன்:

குரு அஷ்டம ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்பாராத சில திடீர் வரவுகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். 

புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. சகோதரர்களின் வழியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில இடமாற்றங்களால் தடுமாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

குடும்ப உறுப்பினர்களிடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். கூட்டாளிகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் தாமதமாக கிடைக்கும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கு சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மனதளவில் புதுவிதமான பக்குவமும், தெளிவும் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: 

பெண்கள்:

பெண்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். 

உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் சாதகமாகும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். மறதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். தாய்வழியில் சரியான வழிகாட்டுதல் மூலம் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த கல்வியில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகத்தில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். சில பணிகளில் மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை உண்டாக்கும். 

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளால் மனதில் ஒருவிதமான குழப்பமும், தடுமாற்றமும் ஏற்படும்.

வியாபாரிகள்:

வியாபாரப் பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். 

சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஆதரவுகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சிலருக்கு சாதகமாகும்.

கலைஞர்கள்:

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

நன்மைகள்:

குரு பெயர்ச்சியால் பேச்சுக்களின் மூலம் உறவினர்களின் ஒத்துழைப்பையும், புதிய அனுபவ அறிவால் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவீர்கள்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் உடன் பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதும், விவேகமான அணுகுமுறைகளை மேற்கொள்வதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

வழிபாடு:

வெள்ளிக்கிழமைதோறும் அய்யனாரை வழிபாடு செய்துவர நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் விலகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top