01.05.2024 முதல் 11.05.2025 வரை
இதுவரை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார்.
தொழில் ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சத்ரு ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
குருவின் பார்வை பலன்கள்:
குரு ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதளவில் அமைதி உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பொன், பொருள் சேர்க்கைக்கான சூழல் உண்டாகும். உணவு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
குரு ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடலளவில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
தனிப்பட்ட பழக்கவழக்கங்களில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.
குரு ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயல்பாடுகளையும் அதன் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். முக்கிய முடிவுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
குரு நின்ற பலன்:
குரு தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் அலுவலகத்தில் சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பொது காரியங்களில் தனிப்பட்ட ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளை முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும்.
குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:
குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,
சிந்தனைகளில் தெளிவின்மையும், குழப்பமும் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத சில தடைகளால் மாற்றங்கள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் ஆர்வமின்மை ஏற்படும்.
வர்த்தகம் தொடர்பான செயல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,
உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் அதிகரிக்கும்.
தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ளவும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகளால் மனதில் அமைதி உண்டாகும். நினைத்த இலக்குகளை அடைவதில் முயற்சி அதிகரிக்கும்.
குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,
தாய்வழி உறவுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். வியாபார போட்டிகளை விடாப்பிடியான முயற்சிகளால் வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில மாற்றமான சூழல் உண்டாகும்.
குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:
குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:
பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும்.
வெளியூர் சார்ந்த பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். ரகசியமான முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:
பெண்கள்:
கனிவான பேச்சுக்களின் மூலம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் பேச்சுக்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டு பேசுவது புரிதலை மேம்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மேல்நிலைக் கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்வது நட்பு வட்டங்களை பெரிதுபடுத்தும்.
உல்லாச பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் புதிய வளர்ச்சியை உருவாக்கிக் கொடுக்கும்.
உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகளும், முன்னேற்றமான வாய்ப்புகளும் கிடைக்கும். ஆசிரியர் பணிகளில் மதிப்புகள் உயரும். நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தகுதிக்கு உண்டான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சில அலைச்சல்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த சில கவலைகள் குறையும்.
வியாபாரிகள்:
வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும். கூட்டணிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.
வாக்குறுதிகள் அளிக்கும்பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. புதிய தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். நம்பிக்கையாக இருப்பவர்களின் மறுமுகம் புலப்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.
கலைஞர்கள்:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மற்றும் வெளியூர் சார்ந்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மறைமுகமான சில விஷயங்களைப் பற்றி புரிதல் அதிகரிக்கும்.
நன்மைகள்:
நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் குடும்பத்தில் ஒற்றுமையும், ஆதரவும், நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளும், பெரியோர்களின் ஆலோசனைகளால் நல்லதொரு பொன்னான காலத்தையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.
கவனம்:
நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உயர் அதிகாரிகளிடத்திலும், அரசு சார்ந்த விஷயங்களிலும் சற்று விவேகத்துடன் செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
வழிபாடு:
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.