தமிழ் புத்தாண்டு ராசி பலன் - மீனம்

 குரு ஆதிக்கத்தில் பிறந்த மீனராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு இந்த வருடம் கிரக சஞ்சாரங்கள், பார்வை, சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும் பொழுது உயர்தரமான, ஏற்றமான பலன்கள் உண்டாகும். படிப்படியாக நல்ல அமைப்புகள் கூடிவரும். கவலைகள் அவநம்பிக்கை நீங்கும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அவரவர் சார்ந்துள்ள தொழில், வியாபாரம், உத்யோகம், அரசியல் போன்றவற்றில் உயர் உச்சநிலையை அடையும் பாக்கியம் உள்ளது. சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

வெற்றி பெற்ற பெரிய மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். இதுநாள் வரை விற்காமல் இருந்த பூர்வீகச் சொத்து நல்ல விலைக்கு விற்கும். உங்களுக்கு சேரவேண்டிய பங்குத்தொகை கைக்கு வரும். அந்த பணத்தை கொண்டு உங்கள் பெயரிலும், மனைவி பெயரிலும் நிலம், அபார்ட்மென்ட் வாங்கிப் போடுவீர்கள். சொந்த பந்தங்களுடன் ஒரு குழுவாக பல மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுக்குச் சென்று தரிசிப்பீர்கள்.

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் நீதிபதிகளாக பதவியில் அமரும் யோக அம்சம் உள்ளது. ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய அபார்ட்மென்ட் அல்லது சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்கியம் உள்ளது. பழைய  நான்கு சக்கர வண்டியை மாற்றி புது மாடல் நான்கு சக்கர வண்டி வாங்குவீர்கள். தந்தையின் உடல் நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் சிறிய உபாதைகளை அலட்சியப்படுத்தாமல் உரிய மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நலம் தரும்.

பெண்கள்:

கவலைகள், அவநம்பிக்கை, மன உளைச்சல் நீங்கும். கன்னிப் பெண்களின் கல்யாண கனவுகள் நனவாகும். நல்ல படித்த வசதியான மாப்பிள்ளை அமைவார். தாய் வீட்டிலிருந்து வரவேண்டிய பாகப் பிரிவினை சொத்து, பணம், நகைகள் மே மாதத்திற்குள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு குலதெய்வத்தின் அருளால் கர்ப்பம் அடைவீர்கள். மாமியார் மற்றும் முக்கிய சொந்தங்களிடையே இருந்த மனவருத்தங்கள் மறையும். குடும்ப விசேஷம் காரணமாக எல்லோரும் சந்தோஷமாக ஒன்றுகூடி மகிழ்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அடுத்
தடுத்து அறுபதாம் கல்யாணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு எனச் சுப விசேஷங்கள் தொடரும்.

உத்யோகஸ்தர்கள்:

உங்கள் எண்ணங்கள், திட்டங்கள் எல்லாம் சாதகமாக கூடிவரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணி இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேருவீர்கள். தொழிற் சங்கத்தில் இருப்பவர்களுக்கு பதவி யோகம் உண்டு. தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளி நாட்டில் வேலை தேடியவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த  லோன் தொகை மார்ச் மாதம் கிடைக்கும். ஆசிரியர், வங்கி ஊழியர்களுக்கு நல்ல மாற்றங்கள் வரும். வக்கீல்களுக்கு சாதகமான நிலை இருக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். அரசுப் பணிக்குத் தேர்வு எழுதியவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் நல்ல செய்தி உண்டு.

அரசியல்- கலைத்துறை:

கட்சியில் செல்வாக்கு உயரும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தோல்வி அடைவார்கள். அரசு கூட்டுறவுத் துறையில் முக்கிய பதவியில் அமருவீர்கள். எதிர் அணியில் இருக்கும் செல்வாக்கு மிக்க பிரமுகர் உங்களுக்கு ஆதரவு தருவார். அதனால் தொகுதியில் பலம் கூடும். கலைத் துறையினருக்கு சாதகமான மாற்றங்கள் வரும். புதிய படங்களில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்படுவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொலைக் காட்சி தொடர் தயாரிப்பீர்கள். பட விநியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

தொழில்-வியாபாரம்- விவசாயம்:

தொழில், வியாபாரம் சாதகமாக நடக்கும். நீண்ட நாட்களாக நினைத்து இருந்த மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய ஏஜென்சி, டீலர் ஷிப் எடுத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வசதி படைத்த உறவினரிடம் இருந்து குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். ரியல் எஸ்டேட் கை கொடுக்கும். கமிஷன் வகையில் ஆதாயம் வரும். புதிய கிளைகள் தொடங்குவதற்கான யோகம் உள்ளது. ஹோட்டல், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், சம்பந்தமான தொழில்கள் லாபகரமாக நடக்கும். தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்பு வியாபாரம் கை கொடுக்கும். விவசாயம் சாதகமாக இருக்கும். புதிய தோட்டம், தோப்பு வாங்கும் பூமி பாக்கியம் உள்ளது. நெல், கரும்பு, மஞ்சள், விவசாயம் சீராக இருக்கும். காபி, மிளகு, ஏலக்காய், போன்றவற்றில் நல்ல ஆதாயம் வரும். காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பில் நல்ல லாபம் பார்க்கலாம். மரம் வெட்டி விற்கும் காண்ட்ராக்ட்டில் நல்ல லாபம் வரும். பூச்செடிகள், மூலிகை நாற்றுக்கள், மரக்கன்றுகள் விற்கும் நர்சரி தொழில் கை கொடுக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வழிபடலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனை தரிசிக்கலாம். கண் பார்வையற்றோர், தொழு நோயாளிகளுக்கு உதவலாம்.


Tags : Tamil new year , Tamil puthandu , meenam , mina , meena rasi , menam

To Top