தமிழ் புத்தாண்டு ராசி பலன் - கும்பம்

 சனியின் ஆதிக்கத்தில் பிறந்த கும்ப ராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு இந்த வருடம் கிரகச் சஞ்சாரங்கள், பார்வை, சேர்க்கை ஆகியவற்றை பார்க்கும்பொழுது நிறைகுறைகள் இருக்கும். விரயச்சனி, குரு அமைப்பு காரணமாக அலைச்சலுக்குப் பிறகு காரியங்கள் கூடி வரும். குரு பார்வை காரணமாக தடைகள் நீங்கும். மதில் மேல் பூனை என்ற நிலைமாறி ஸ்திரமாக முடிவு எடுப்பீர்கள். எதையும் சவாலாக எதிர்கொண்டு செய்து முடிப்பீர்கள். விரயச் சனி என்பதால் கவலை தேவை இல்லை. இக்கால கட்டத்தில் பிற்கால வாழ்க்கைக்கான அடித்தளத்தை சனி அமைத்துக் கொடுப்பார்.

அவரவர் வயதிற்கேற்ப பலன்கள் இருக்கும். உயர் கல்வி சம்பந்தமாக மாணவ, மாணவிகள் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த குடியுரிமைச் சான்றிதழ் கைக்கு வரும். புதிய வேலை தேடியவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை அமையும். கோயில் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் சில நெருக்கடிகள், அலைச்சல், மன உளைச்சல் இருந்தாலும் பிற்காலத்தில் பயன் தரும் வகையில் அமையும்.

வீடு, கடை, இடம், காலி செய்வது சம்பந்தமான வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வந்து போகும். மனைவி வகையில் மருத்துவச் செலவுகள் வரலாம். அவர்கள் வயதிற்கேற்ப உடல் நலம் பாதிக்கப்படலாம். மூட்டுவலி, கழுத்துவலி, வயிறு கோளாறுகள் வரும். சிறிய குறைபாடு தானே என்று அலட்சியம் காட்டாதீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் பல காரணங்களுக்காக வேறுபகுதிக்கு குடிபோவீர்கள்.

பெண்கள்:

குரு, சனி பலம் காரணமாக உற்சாகமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களை புரிந்துகொண்டு பாசம் காட்டுவார்கள். வெளியூரில்வேலை செய்து கொண்டிருக்கும் கணவருக்கு பணி இடமாறுதல் கிடைக்கும். இதனால் குடும்பத்துடன் ஒன்று சேருவார். பேரன், பேத்திகளுக்கு முடி இறக்கி காது குத்தும் விழாவை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம். எதிலும் கவனமாக இருப்பது உத்தமம். அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மகன், மருமகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியாக ஒன்றிணைவார்கள். அதனால் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு, கருப்பை, சிறுநீரக தொற்று போன்ற உபாதைகள் வரவாய்ப்புள்ளது.

உத்யோகஸ்தர்கள்:

உத்யோக வகையில் சாதகமான மாற்றங்கள் வரும். வேலைச்சுமை படிப்படியாக குறையும். பணி நிரந்தரம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு. சிறப்புச் சலுகைகள் கிடைக்கும். பகுதி நேர வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். மார்ச் மாத வாக்கில் தற்காலிக இடமாற்றம் வரலாம். விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர்கள் புதிய நிறுவனத்தில் வேலையில் சேருவீர்கள். காவல் துறையில் இருப்பவர்களுக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.

அரசியல்-கலைத்துறை:

மாநில அளவில் பதவி, பொறுப்பு கிடைக்கும். தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர் கோஷ்டியினர் அடங்கிப் போவார்கள். தொழிற்சங்கத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். அரசாங்கம் அமைக்கும் உயர்மட்டக் குழுவில் இடம் பிடிப்பீர்கள். அதனால் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு தேக்கநிலை நீங்கும். புதிய படங்களில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நகைச்சுவை நடிகர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பட விநியோகஸ்தர்களுக்கு தேக்கநிலை நீங்கும். ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படங்கள் ரிலீஸாகி கொடுக்கல் வாங்கலில் நின்றுபோன தொகை கைக்கு வரும்.

தொழில் - வியாபாரம் - விவசாயம்:

வியாபாரம் சாதகமாக இருக்கும். அவசரத் தேவைக்காக அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். வங்கியில் இருந்து எதிர்பார்த்த லோன் பணம் மார்ச் மாதத்திற்குள் கிடைக்கும். அலைச்சல், வேலைச்சுமை, பயணங்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், பண விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். புதிய நண்பர்களின் பேச்சைக் கேட்டு தெரியாத விஷயங்களில் இறங்க வேண்டாம். மின் சாதனங்கள், கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், உதிரி பாகங்கள் தொழிலில் நல்ல லாபம் வரும். ரியல் எஸ்டேட், கமிஷன், காண்ட்ராக்ட் வகையில் தேக்கநிலை நீங்கி சூடுபிடிக்கும். விவசாயம் சீராக இருக்கும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். நெல், கரும்பு, மஞ்சள், சோளம், பருத்தி விவசாயம் லாபகரமாக நடக்கும். சிறுதானியங்கள் கம்பு, கேழ்வரகு, சானம், வரகு, தினை, மொச்சை வகைகள் பயிர் செய்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். லாரி, டிராக்டர், பம்ப்செட் அமைக்க வங்கியிலிருந்து கடன் கிடைக்கும்.

பரிகாரம்:

சிவலிங்க அபிஷேகத்திற்கு சந்தனம், தேன், பழவகைகள் வாங்கித்தரலாம். திருவள்ளூர் வைத்திய வீரராகவா பெருமாளைத் தரிசிக்கலாம். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.


Tags : Tamil new year , Tamil puthandu , kumbam , kumba rasi , kumbha rasi

To Top