குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - கடகம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் :

01.05.2024 முதல் 11.05.2025 வரை

இதுவரை தொழில் ஸ்தானமான பத்தாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார்.

லாப ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான புத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குருவின் பார்வை பலன்கள்:

குரு ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் இளைய உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் மேம்படும். 

எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

குரு ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். பேச்சில் தெளிவு பிறக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். 

தனிப்பட்ட சில அனுபவத்தின் மூலம் செயல்களில் மாற்றம் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.

குரு ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் அயல்நாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். 

ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். தர்ம பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். அரசாங்க விஷயங்களில் இருந்துவந்த தாமதம் நீங்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குரு நின்ற பலன்:

குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கும், மதிப்பும் உயரும். 

குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. வெளிவட்டார தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். 

வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொண்டு வரவுகளை மேம்படுத்துவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்வதற்கான சூழல் உண்டாகும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

பணி நிமிர்த்தமான வெளியூர் தொடர்புகளால் மதிப்பும், ஆதாயமும் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். 

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களிடத்தில் புரிதலும், அனுசரிப்பும் வேண்டும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். 

உயர்நிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

சிந்தனையின் போக்கில் சற்று கவனத்துடன் இருக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நெருக்கடிகளை குறைக்கும். சுபகாரிய செயல்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். 

வெளியூர் பயணங்களில் ஆதாயத்தை அறிந்து மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மற்றவர்களின் பேச்சுக்களில் உள்ள உண்மை நிலைகளை அறிந்து புதிய செயல்களில் ஈடுபடுவதை மேற்கொள்ளவும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:

பெண்கள்:

பெண்களுக்கு குழந்தைகள் பற்றிய கவலைகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான முயற்சிகள் கைகூடிவரும். சிறு மற்றும் குறுந்தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். 

பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். 

ஆசிரியர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகளும், உயர்வான சூழல்களும் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான இடமாற்றம் அமையும். மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. 

இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். சகப்பணியாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

வியாபாரிகள்:

வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் குறையும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளும், அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும்பொழுது சற்று சிந்தித்துச் செயல்படவும். 

கொடுக்கல், வாங்கலில் தகுந்த ஆவணங்களைக் கொண்டு செயல்படுவது லாபத்தை பெருக்கும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் சேர்க்கை ஏற்படும். கூட்டாளிகளுடனான பணிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும்.

கலைஞர்கள்:

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் சார்ந்த ஒருவிதமான குழப்பம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்கு பின்பு சாதகமான வாய்ப்புகளும், மதிப்புகளும் ஏற்படும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். 

எதிர்பாராத சில வெளியூர் பயணங்களால் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும்.

நன்மைகள்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை நுட்பமாக செயல்பட்டு, உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் மாற்றங்களை உருவாக்குவீர்கள்.

கவனம்:

நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் எதிர்காலம் சார்ந்த சில முதலீடுகளை ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.

வழிபாடு:

செவ்வாய்க்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் கைகூடிவரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top