கிரகநிலை - ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில ஸ்தானத்துக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த ராகு கேது பெயர்ச்சியில் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும்.
பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள்.
முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.
கலைத்துறையினருக்கு வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை.
மூலம்:
இந்த பெயர்ச்சியால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மனநிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம்.
வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. எனினும் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
பூராடம்:
இந்த பெயர்ச்சியால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும்.
கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும்.
உத்திராடம்:
இந்த பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது.
மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
(2023 அக்.8-ம் தேதி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனத்துக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் மாறி 2025 ஏப்.26-ம் தேதி வரை அங்கு இருக்கிறார்கள். அதாவது, தனுசுக்கு ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில ஸ்தானத்துக்கு மாறுகிறார்.)